போலி அடையாள அட்டை 
க்ரைம்

திருப்பூர் | சிபிஐ அதிகாரி எனக் கூறி போலி அடையாள அட்டை தயாரித்து ஏமாற்றியவர் கைது

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: சிபிஐ அதிகாரி எனக் கூறி, ரூ.65,000-க்கு உளவுப் பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி அடையாள அட்டை தயாரித்து ஏமாற்றியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் பவானி நகரில் சகோதர இளைஞர்கள் 2 பேர், உளவுப் பிரிவு போலீஸாராக பணியாற்றுவதாக அப்பகுதியினருக்கு தெரிவித்துள்ளனர். இதில் அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து வடக்கு போலீஸார் விசாரித்தனர்.

இதையடுத்து பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 2-வது வீதியை சேர்ந்த ராசையா (27) என்பவர் சிபிஐ-ஆக இருப்பதாகவும், அவர் தான் தங்களை இந்த வேலையில் சேர்த்துவிட்டதாகவும் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் ராசையாவை பிடித்து விசாரித்தனர். அதில் தான் சிபிஐ அதிகாரியாக போலீஸாரிடம் தெரிவித்தவர், தொடர்ந்து போலீஸார் விசாரணைக்கு பின்னர் கட்டிட மேஸ்திரியாக பணி செய்து வருவதை ஒப்புக் கொண்டார்.

ராசையா

இதையடுத்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தை கொண்டு, அங்கிருந்த மற்றொரு நபர் மூலம் சகோதரர்களை உளவுப் பிரிவு போலீஸாக சேர்த்துவிடுவதாகக் கூறி, 2 பேரிடம் ரூ.65 ஆயிரம் பெற்றுள்ளார். தொடர்ந்து மூத்த சகோதரருக்கு ஒவ்வொரு ஊராக சென்று, அங்குள்ள நிலவரத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளம் தருவார்கள் என்று நம்ப வைத்துள்ளார்.

ஆனால், சகோதரர்களுக்கு அளித்த அடையாள அட்டையில் எவ்வித சீல் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவை இல்லாததால், சகோதரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் வடக்கு போலீஸார் ராசையாவிடமிருந்து போலீஸார் போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT