க்ரைம்

மேற்கு வங்கத்தில் கணவரால் கொடுமை - பெருந்துறை பெண்ணை மீட்ட போலீஸார்

செய்திப்பிரிவு

ஈரோடு: மேற்கு வங்க மாநிலத்தில் கணவரால் சித்ரவதைக்குள்ளான பெருந்துறையைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் மீட்டு, ஈரோடு அழைத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பாலக்கரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சுமித்ரா. கடந்த 2017ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்று விட்டனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து, அவர் பெருந்துறையில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சுமித்ராவை அவரது கணவர் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த சுமித்ரா, தன்னையும், குழந்தையையும் மீட்க கோரினார்.

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்ததையடுத்து, பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையிலான போலீஸார், கொல்கத்தா சென்று, உள்ளூர் போலீஸார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுமித்ரா சித்திரவதை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார், சுமித்ரா மற்றும் அவரது குழந்தையை மீட்டு பெருந்துறைக்கு புறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT