கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸார் கூறியதாவது: பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சக்கில் நத்தம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (17) என்ற மாணவர் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மதியம் 3 மணி அளவில் இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு வெளியே அவர் வந்தபோது, அவருடன் படிக்கும் சகமாணவர் ஒருவர் விளையாட்டாக தனது கையில் வைத்திருந்த தைலத்தை கோபிநாத்தின் தலையில் தடவினார். இதில், 2 பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், கோபிநாத்துக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. கோபிநாத்தை மீட்ட ஆசிரியர்கள், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே கோபிநாத் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.