வெங்கடேசன் 
க்ரைம்

செங்கல்பட்டு | நாட்டு வெடிகுண்டுகள் வீசி கும்பல் தாக்குதல்; சென்னை அருகே ஊராட்சி தலைவர் கொலை: போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: சென்னை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனை, ராகவேந்திரா நகர் அருகே மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தவர் வெங்கடேசன். அதேபகுதியை சேர்ந்த இவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், மாடம்பாக்கத்தை அடுத்த ஆதனூர் பகுதியில் ராகவேந்திரா நகர் பாலம் அருகே அதே ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் சத்யாவுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மர்ம கும்பலை சேர்ந்த நபர்கள் வெங்கடேசன் மீது மூன்றுநாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். அதில் ஒன்று மட்டுமே வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால்,அவரை பின்தொடர்ந்த மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு: இதில், பலத்தகாயமடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டதால் மாடம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீஸார், உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம்ஏற்கெனவே இவரைக் கொல்லமுயற்சி நடைபெற்று அதில் இருந்து தப்பியுள்ளார். மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் கஞ்சாவிற்பனை தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து வந்ததால், அதில் ஏதேனும் முன்விரோதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT