சென்னை: தாயின் தவறான உறவால் சென்னையில் 9 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் பூவரசி (30).
10 ஆண்டுகளுக்கு முன்பு தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தருண் (9) என்ற மகன் இருந்தார். தருணுக்கு ஒன்றரை வயது இருக்கும்போது கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபக், பிரிந்து சென்றுள்ளார்.
இதையடுத்து மகனுடன் வசித்து வந்த பூவரசி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு பூவரசிக்கு, தமிழ்செல்வன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் தருணும் இருந்தார்.
செல்போன் தொடர்பு
பூவரசிக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருப்பதாக கூறி தமிழ்செல்வன் சந்தேகம் அடைந்தார். பூவரசியை இளைஞர் ஒருவர் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டதாகவும், இதுதொடர்பாக தமிழ்செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு பூவரசியும், தமிழ்செல்வனும் வெளியே சென்றுவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த சில பெண்களுடன் தமிழ்ச் செல்வனுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்கள் தமிழ்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது பூவரசி, தமிழ்செல்வனுக்கு ஆதரவாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், பூவரசியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் பூவரசியை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழ்செல்வன், உனது மகன் தருணை கொலை செய்யப்போகிறேன் என மிரட்டி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவரசி வீடு நோக்கி விரைந்துள்ளார்.
சிறிது நேரத்தில் மீண்டும் பூவரசியை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழ்செல்வன், தருணை கொலை செய்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பூவரசி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சிறுவன் தருண் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அவர் கதறி அழுதார். பூவரசியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்த அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தப்பிச் சென்றார்
கோயம்பேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், பூவரசிக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக, தமிழ்செல்வன் மதுபோதையில் சிறுவன் தருணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.