கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில், உடன் படிக்கும் மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 8-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை, உடன் படிக்கும் சக மாணவர்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து, வெளியே கூறினால் மேலும் துன்புறுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி மாலை பள்ளியில் மீண்டும் அந்த மாணவரை சக மாணவர்கள் துன்புறுத்தியுள்ளனர். இதில், அந்த மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், மாணவரை கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட மாணவர்கள் துன்புறுத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பி.என்.எஸ். மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ், 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மாணவரை துன்புறுத்தியதாக 8-ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும், 3 மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது: இப்பள்ளியில் மாணவனை, சக மாணவர்கள் துன்புறுத்திய சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள்தான் முதலில் கண்டுபிடித்துள்ளனர். இருதரப்பு மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, குழந்தைகள் நலக்குழு மூலம் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, காவல் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.