க்ரைம்

சென்னை | காதலை தொடர மறுத்த இளம் பெண் மீது தாக்குதல்: இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: காதலை தொடர மறுத்த கேரள பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு (20). இவர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இதற்காக அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இந்நிலையில் சோனு பணி முடித்து தங்கும் விடுதி நோக்கி நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் காதலை தொடரும்படியும், திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் தகராறு செய்துள்ளார். மறுப்பு தெரிவித்த சோனு மீது அந்த இளைஞர் மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோனுவை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ளமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முகம் உள்ளிட்ட பலபகுதிகளில் 25 தையல்கள் போடப்பட்டன. இந்த தாக்குதல் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நவீன் (25) என்பவரை கைது செய்தனர்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நவீன், தாக்குதலுக்குள்ளான சோனுஇருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, நவீன் தன்னை கடற்படை வீரர் என சோனுவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் நட்பாகி, பின்னர் காதலராகியுள்ளனர். இந்நிலையில், நவீன் கடற்படை வீரர் இல்லை என தெரியவந்ததும் சோனு முற்றிலும் விலகியுள்ளார். இதன் காரணமாக நவீன் நேரில் சென்று சோனுவை கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

SCROLL FOR NEXT