தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரீஸ் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். திமிங்கலங்கள் தங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும்.இதுவே, அம்பர்கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர்கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிலோ ரூ.1 கோடி ஆகும். இந்தியாவில் அம்பர்கிரீஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
11 கிலோ ரூ.11 கோடி: உடன்குடி அருகே ரூ.11 கோடி மதிப்பிலான 11 கிலோ அம்பர்கிரீஸ் நேற்று சிக்கியது. குலசேகரன்பட்டினம் போலீஸார் நேற்று காலை 11 மணியளவில் உடன்குடி- வில்லிகுடியிருப்பு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ 125 கிராம் எடை கொண்ட அம்பர்கிரீஸை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையைச் சேர்ந்த மரியதங்கம் மகன் ததேயூஸ் பெனிஸ்றோ (44), பெருமணலைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் அருள் ஆல்வின் (40), செட்டிகுளத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் வேணுகோபால் (35) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.