பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன். இவர், கடந்த ஆக.31-ம் தேதி 17 வயது சிறுமியுடன் தலைமறைவானார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைகளத்தூர் போலீஸார், செப்.2-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, செப்.3-ம் தேதி சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அக்.25-ம் தேதி மணிகண்டனின் தந்தை ராமசாமி(50), இவரது உறவினரான மாரிமுத்து(27) ஆகியோர், உன்னை எப்படியாவது கடத்திச் சென்று, மணிகண்டனுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என சிறுமியை மிரட்டியுள்ளனர். மேலும், சிறுமியின் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதனால், மன வேதனையடைந்த அந்தச் சிறுமி, அக்.25-ம் தேதி விஷம் குடித்து மயங்கிவிழுந்தார். இதையடுத்து, சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, நேற்று உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னதாக அந்தச் சிறுமி, சேலம் மாவட்ட குற்றவியல் நடுவரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தநிலையில், ராமசாமி, இவரது மனைவி ராணி, மகன் மணிகண்டன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமசாமி, மாரிமுத்து ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
ராமதாஸ் கண்டனம்.. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.