அரியலூர்: அரியலூர் அருகே உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் போலீஸார் நேற்று (நவ.14) இலந்தைகூடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், போலீஸாரை கண்டதும் கையில் இருந்த பொருளை தூக்கி காட்டுப்பகுதியில் வீசுவதை போலீஸார் பார்த்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு போலீஸார் பார்த்தபோது, நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து அந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வான்டிராம்பாளையம் அமலதாஸ் மகன் ரெத்தினகுமார்(29), மற்றொருவர் அரியலூர் மாவட்டம் விளாகம் லூகாஸ் மகன் பாப்புராஜ்(29) என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், கொக்கு, நாரை, நரி உள்ளிட்டவற்றை வேட்டையாட பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.