க்ரைம்

மதுரையில் விருந்தில் மோதல்; துப்பாக்கி சூடு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அருகே நடைபெற்ற அசைவ விருந்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சக நண்பரை மிரட்டும் விதமாக ஒருவர் கைத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கி.கொக்குளத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருமங்கலம் அருகில் உள்ள காட்டுப் பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று கிடா வெட்டி விருந்து நடத்தினார். இதில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தனசேகரின் நண்பர்களான ஏ.தொட்டியபட்டி கணபதி, மதுரையைச் சேர்ந்த வேதகிரி ஆகியோரும் பங்கேற்றனர். மதுபோதையில் இருந்த இவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த வேதகிரி தனது காருக்குள் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதையடுத்து கறி விருந்தில் பங்கேற்றவர்கள் தப்பி ஓடினர். சுதாரித்துக் கொண்ட வேதகிரியும் அங்கிருந்து தனது நண்பர்களுடன் காரை எடுத்துக் கொண்டு தப்பினார். திருமங்கலம் நகர் போலீஸாருக்கு கணபதி தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி வசந்தகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தனசேகர், கணபதியை பிடித்து விசாரித்தனர். வேதகிரி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

SCROLL FOR NEXT