புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளார். தனது ஓய்வூதிய பலன்களை 4 வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது போனுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் நட்புடன் பழகுவதற்கு (டேட்டிங்) இளம் பெண்களை அனுப்பும் சேவை வழங்கி வருவதாக பெண் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு அந்த முதியவரும் ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின் அவர்கள் கூறியபடி குழுவில் சேர்ந்து கேட்கும் பணத்தை யுபிஐ கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.
இப்படி கடந்தாண்டு டிசம்பர் முதல் கடந்த ஜூன் வரை, டேட்டிங் சேவை அளிக்கும் பெண் கேட்கும் போதெல்லாம் முதியவர் பணம் அனுப்பி டேட்டிங் சென்றுள்ளார். இதுபோல் 7 மாதத்தில் ரூ.17 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார். அதை அறிந்த முதியவரின் மகன் சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து வர்ஜே மல்வாடி ஆய்வாளர் தத்ராம் பக்வே கூறுகையில், ‘‘டேட்டிங் சேவை அளிக்கும் பெண் குறிப்பிட்ட 13 வங்கிக் கணக்குகள் கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும் ராஜஸ்தானில் உள்ளன’’ என்றார்.