குவாஹாட்டி: மத்திய படைகளில் ஒன்றான சசாஸ்த்ரா சீமா பல் படை (எஸ்எஸ்பி) வீரர்கள் நேபாளம், பூடான் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமின் சோனிட்பூர் மாவட்டம், துலா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண கமல் என்பவர் எஸ்எஸ்பி படையில் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்த 13 வயது சிறுமி கடந்த ஜூன் 11-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது.
எனினும் உண்மை நிலவரம் தெரிந்த உள்ளூர் நிருபர் ஒருவர், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். முதல்வரின் உத்தரவின்பேரில் சிறுமியின் தற்கொலை வழக்கை சிஐடி போலீஸார் மீண்டும் விசாரித்தனர்.
அதில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவந்தது. கொலையை மறைக்க போலீஸ் அதிகாரிகள் முதல் நீதிபதி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு, அவர்களின் உதவியால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மைகளை கண்டறிந்த சிஐடி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கொலையாளி கிருஷ்ண கமலை கைது செய்தனர்.
கொலையை மறைக்க உதவிய எஸ்.பி. ராஜ்மோகன் ராய், ஏஎஸ்பி ரூபம் புக்கான், அரசு மருத்துவர்கள் அஜந்தா போர்டோலாய், அருண் தேகா, அனுபம் சர்மா ஆகியோர் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் ஆசிர்பட் ஹசாரிகா நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். இவர்கள் அனைவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு கொலை வழக்கை, தற்கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
கைதான எஸ்.பி., ஏ.எஸ்.பி., அரசு மருத்துவர்கள், மாஜிஸ்திரேட் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசாமில் சந்தேகத்துக்குரிய அனைத்து வழக்குகளிலும் மறு விசாரணை நடத்த முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உத்தரவிட்டு உள்ளார்.