திருச்சி: திருச்சி கீழரண் சாலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான்(29). கடந்த 7-ம் தேதி அப்பகுதியில் உள்ள அந்தோனியார் கோயில் வளைவு அருகே அவரது தங்கை நிஷாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோட்டை பட்டவர்த்திசாலையைச் சேர்ந்த ரவுடியான சண்டி என்கிற சக்திவேல்(26) உள்ளிட்ட சிலர், நாகூர் மீரானை கத்தியைக் காட்டி மிரட்டி அழைத்துச் சென்றனர். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் நிஷா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் டவுன் ஹால் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ண பிரியா முன் சண்டி என்கிற சக்திவேல்(26), கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த விருமாண்டி என்கிற யுவேந்திரன்(19), மலைக்கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த அரச குமரன்(18), ஜான்தோப்பு பாலமுருகன்(18) ஆகியோர் நேற்று சரணடைந்தனர்.
அப்போது, 4 பேரும் சேர்ந்து நாகூர் மீரானை அடித்துக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து கிருஷ்ண பிரியா அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸார் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.