மதுரை: சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கிளைகளை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றியதாக மதுரை திருமங்கலத்தில் போலி வங்கிக் கிளையில் நேற்று போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
திருமங்கலத்தில் மதுரை ரோட்டில் ‘ஊரக மற்றும் வேளாண் விவசாயக் கூட்டுறவு’ என்ற பெயரில் வங்கிக்கிளை செயல்பட்டு வந்தது. இவ்வங்கி நிர்வாகம் விவசாயிகள், கிராமப்புற மகளிருக்கு பல்வேறு கடனுதவிகளை செய்வ தாகக்கூறி, சட்டவிரோதமாகச் செயல்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், சென்னையில் இந்த வங்கி நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் சென்னை, மதுரை திருமங்கலம் உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த வங்கிக் கிளைகளில் தீவிரச் சோதனை நடத்தினர்.
திருமங்கலத்தில் செயல்படும் வங்கிக் கிளையில் போலீஸார் நடத்திய தீவிரச் சோதனையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிய விவரம் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அந்த வங்கி செயல்படாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.