க்ரைம்

ஆன்லைனில் போதைப் பொருள் விற்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து ஆன்லைனில் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். வடசென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், சிலர் மெத்தம் பெட்டமைன்என்கிற போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றி வருவதும், இதனை மர்மகும்பல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இந்தகும்பலை பிடிக்க மீன்பிடி துறைமுகம் காவல்நிலைய ஆய்வாளர்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மீன்பிடி துறைமுகம் பழைய வார்ப்பகுதியில் கண்காணிப்பு பணியில்இருந்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதுபறிமுதல் செய்யப்பட்டு போதைப்பொருட்களை வைத்திருந்த மீஞ்சூரைச் சேர்ந்த வசீகரன் என்ற மோகன்பாபு(39), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வமணி(26) ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து போதைப் பொருட்களை விற்று வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ளகணேசமூர்த்தியை என்பவரைதேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT