சென்னை: சிலை திருட்டு கும்பலிடம் இருந்து நடராஜர் உலோக சிலையை போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள புராதனக் கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொன்மையான சிலைகளை திருடி, பணத்துக்காக வெளிநாடுகளில் விற்பனை செய்யும் கும்பல்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் ஒரு கும்பல், தமிழக கோயில்களில் இருந்து சிலைகளை திருடி, சட்ட விரோத விற்பனையில் ஈடுபட முயன்று வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டனர். இதையடுத்து, திருச்சி சரக கூடுதல்எஸ்.பி. பாலமுருகன் மேற்பார்வையில், ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கோவை சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, சிலை கடத்துபவர்கள் என ஒருசிலர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சிலை வாங்குவதுபோல அவர்களிடம் பேசிய போலீஸார், கோவையில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள இருகூருக்கு சிலையை 6-ம் தேதி (நேற்று முன்தினம்) அதிகாலை 5 மணிக்கு கொண்டுவருமாறு அவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி, மாறுவேடத்தில் போலீஸார் அங்கு சென்று காத்திருந்தனர்.
2 பேர் கைது: எதிர்பார்த்தபடி, அந்த கும்பலைசேர்ந்த 2 பேர், காரில் ஒரு நடராஜர்உலோக சிலையை கொண்டுவந்தனர். சுமார் 3 அடி உயரத்தில் திருவாச்சியுடன் அந்த சிலை இருந்தது. சிலை குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், 2 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து சிலையை பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த மேட்டூர் வி.டி.சி. நகரை சேர்ந்த ஜெயந்த் (22), காரில் இருந்த கேரள மாநிலம் பாலக்காடு கல்லடத்தூரை சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர். சிலை கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பு: இந்த நடராஜர் சிலையை வெளிநாட்டில் விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த சிலையின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தின் எந்த ஊரில் உள்ள கோயிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது, இந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.