புதுச்சேரி: ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்ட சூழலில், இழந்ததை மீட்க கடைசியாக விளையாடிய ரூ.50 ஆயிரமும் நஷ்டமானதால் புதுச்சேரியில் தனியார் உணவக ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
புதுவை அடுத்த சோம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் வல்லுனராக 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கடனாக பணத்தைப் பெற்றுள்ளார். அதை கொடுக்க முடியாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் அதனை ஈடு செய்வதற்காக ஆன்லைன் ஆப் மூலமும் கடனை பெற்றுள்ளார். இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மிலாடி வீதியில் அவர் தங்கியிருந்த விடுதியில் ஆடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்த போலீஸார் தெரிவித்தனர்.
அந்த ஆடியோவில், "சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கும் சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் திரும்பி வந்து, ஏற்கெனவே வேலை செய்த ஹோட்டலில் வேலை செய்தேன். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ரூ.50 ஆயிரம் ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளேன்" என குறிப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒதியஞ்சாலை போலீஸார் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.