க்ரைம்

கம்போடியாவில் கணினி பணி எனக் கூறி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தி துன்புறுத்தல்: மீண்டு வந்த இளைஞர் ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை கணினி பணி எனக் கூறி கம்போடியா அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்தார்.

முதுகுளத்தூர் பிரபுக்களூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் நீதிராஜன்(28). டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். இவரது ஊருக்கு அருகே உலையூரைச் சேர்ந்த மருதராஜ் மகன் அசோக் மணிக்குமார் (28). பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரி. இவர்கள் இருவரும் அருகே கொழுந்தூரைச் சேர்ந்த மகாதீர் முகம்மது என்பவர் மூலம், கம்போடியாவில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு, மாதம் 1000 அமெரிக்கா டாலர் ஊதியம் எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு இருவரையும், ஒரு நிறுவனத்தில் அடைத்து வைத்து மோசடி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தினர். இவர்கள் மறுத்ததால் அறையில் அடைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், இந்தியத் தூதரகம் மூலம் மீண்டும் சொந்த ஊர் திரும்பினர். இதில் நீதி ராஜன் நேற்று மாவட்ட எஸ்பி அலு வலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து நீதிராஜன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கரோனா காலத்தில் வேலையின்றி இருந்ததால் வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். அதன்படி கொழுந்தூரைச் சேர்ந்த நைனா முகம்மது மனைவி சையது ருஹானி தனது மகன் மகாதீர் முகம்மது கம்போடியாவில் நல்ல வேலை யில் இருப்பதாகவும், மேலும் வெளிநாட்டு வேலை ஏஜெண்டாக உள்ளதாகவும் கூறினார். அதை நம்பி, கம்போடியா செல்ல முடிவு செய்தேன். மகாதிர் முகம்மதுவும், அவரது தாயும் என்னிடம் ரூ.2.50 லட்சம் பெற்றனர்.

பின்னர் கடந்த ஜூனில் மகாதீர் என்னை சுற்றுலா விசாவில் கம்போடியா அழைத்துச் சென்று, ஒரு மோசடி நிறுவனத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு விற்று விட்டார். அந்த நிறுவனம் சைபர் குற்றங்களை செய்வது தெரிய வந்தது. அவர்கள் எங்களை சித்ரவதை செய்தனர்.

பின்னர் இந்திய தூதரகம் மூலம் மீண்டு வந்தோம். மோசடி நிறுவனத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் சுற்றுலா விசாவில் செல்லக்கூடாது. வேலைக்கான விசாவை உறுதி செய்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும். எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT