திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை முடிந்து நேற்று முன் தினம் இரவு மூடப்பட்டது. இந்நிலையில், மதுபான கடையின் சுவற்றில் துளையிடப்பட்டு, கடைக்கு வெளியே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது நேற்று காலை தெரியவந்தது.
இதையறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், கடைக்கு விரைந்து சென்று கடையில் இருந்த மதுபாட்டில்களின் இருப்பை சரிபார்த்தனர். இதில் ரூ.18 ஆயிரத்து 100 மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டது. கடையின் லாக்கரை திறக்க முடியாததால், அதிலிருந்த ரூ.1.80 லட்சம் தப்பியது. மேலும், தூசி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஒரு நபர் நுழையும் அளவுக்கு சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில், முகத்தை துணியால் மூடிக்கொண்டு, கடையில் இருந்து மதுபாட்டில்களை எடுத்து கொண்டு மர்ம நபர் வெளியே வருவது தெரியவந்தது. இது குறித்து தூசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.