நாகர்கோவில்: பணம் முதலீடு செய்பவர்களுக்கு 3 மாதத்தில் 5 மடங்காக திருப்பித் தருவதாக தமிழகம் முழுவதும் பண மோசடியில் ஈடுபட்ட 17 பேரை கன்னியாகுமரி விடுதியில் போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் சமீப காலமாக பணம் முதலீடு செய்பவர்களுக்கு பன்மடங்கு தொகை தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஒரு கும்பல் பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இக்கும்பல் ஏற்கெனவே கோவை, மதுரை, திருச்சி,திருநெல்வேலி உட்பட பல இடங்களில் பண வசூல் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ள சிலர் பண மோசடி செய்வது தெரியவந்தது. மாவட்ட எஸ்பி ஹரிகிரண்பிரசாந்த், டிஎஸ்பி ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கன்னியாகுமரியில் ஓட்டல்கள் கண்காணிக்கப்பட்டன.
கடந்த 1-ம் தேதி இரவு கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டலில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர்களைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்வது இருந்தது. போலீஸார் அந்த விடுதியை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். போலீஸாரை கண்டதும் அந்த லாட்ஜில் வெவ்வேறு அறைகளில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பண மோசடி கும்பல் என்பது உறுதியானது. இவர்களிடம் பணம் முதலீடு செய்ய வந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 2 நாட்களாக மதுரை பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டியன்(36), ராஜமணி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 11 லட்சம் பணம், 3 கார்கள், 31 செல்போன்கள், 2 லேப்டாப்கள், விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டைகள், ஸ்கேனர், பிரின்டர் போன்றவை பறிமுதல் செ்ய்யப்பட்டன.விசாரணையில் ரூ.100 முதலீடு செய்தாலே 3 மாதத்தில் 500 ரூபாயாக கிடைத்துவிடும். இதைப்போல் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும் அதைப்போல் 5 மடங்கு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.