க்ரைம்

சேலத்தில் கடத்தப்பட்ட ரவுடி மீட்பு - நகைக் கடை உரிமையாளர், மேலாளர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் காரில் கடத்தப்பட்ட ரவுடியை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளர், மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் கோரிமேடு அருகே உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). ரவுடி. இவரது நண்பர் ராஜாராம் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார். இவர்கள் இருவரையும் காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் பிரவீன்குமார் காரில் இருந்து தப்பினார். புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தல் கும்பலை பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பூபதியை விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பியது. போலீஸார் நேற்று முன் தினம் இரவு பூபதியை மீட்டனர்.

விசாரணையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் வீராணத்தில் உள்ளது. அந்த நிலத்தை விற்று தருவதாக பூபதி அசல் பத்திரத்தை வாங்கி கொண்டு, நிலத்தை விற்பனை செய்யாமலும், அசல் பத்திரத்தை தராமலும் இருந்துள்ளார். இதனால், ஏகாம்பரம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கூலிப்படை உதவியுடன் பூபதியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, நிலத்தின் பத்திரத்தை வாங்கிக் கொண்டு திரும்ப கொடுக்காமல், கொலை மிரட்டல் விடுத்ததாக பூபதி மீது அழகாபுரம் காவல் நிலையத்தில் ஏகாம்பரம் புகார் அளித்தார். புகாரின் பேரில், பூபதியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பூபதியை கடத்திய கூலிப்படையினரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT