கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு காலாவதியான சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ‘இந்து தமிழ் உங்கள் குரலில்’ வாசகர் எஸ்.உமாபதி தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கூடுவாஞ்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலாவதியான சத்து மாத்திரைகள் மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில மாணவிகள் அதை உட்கொண்ட பிறகு ஒரு மாணவி, மாத்திரைகள் காலாவதி ஆகியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாத்திரை விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்கள் மாத்திரைகளை முறையாக ஆய்வு செய்யாமல் மாணவிகளுக்கு வழங்கியுள்ளனர். அதிருஷ்டவசமாக யாருக்கும் எந்த உபாதையும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் கவனக்குறைவு எங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்றார்.
இது குறித்து நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேஷ் கூறியதாவது: மாத்திரைகள் வழங்கப்படும் முன்பு எப்போது தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர் கூறிய புகாரின் படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை, புகாரும் வரவில்லை. இருந்தாலும் இனிமேல் அதிக கவனம் செலுத்தி மாத்திரைகள் விநியோகிக்கப்படும் என்றார்.