காசியாபாத்: செய்தித்தாள் விநியோகிப்பாதை போல வீட்டில் ஆள் நடமாட்டம் உள்ளதா என்பதை நூதன முறையில் நோட்டமிட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் கொள்ளையர்கள். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் நடந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை நடைபெற்ற வீட்டில் ரவீந்திர குமார் பன்சால் எனும் சீனியர் சிட்டிசனும், அவரது மனைவி மற்றும் மகளும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றுவிட்டு புதன் அன்று வீடு திரும்பியுள்ளனர். அப்போதுதான் கொள்ளை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கடந்த 29-ம் தேதி வீட்டில் இருந்து கோயிலுக்கு புறப்பட்டு உள்ளனர்.
“நாங்கள் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பிரதான கதவு திறக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்கு வெளியே செய்தித்தாள் ஒன்று இருந்தது. வீட்டில் உள்ள அறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு இருந்தது. பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் களவு போயுள்ளன. இதன் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் இருக்கும். எங்கள் வீட்டில் நாங்கள் செய்தித்தாள் வாங்குவதில்லை. ஆனால் 29-ம் தேதியிட்ட செய்தித்தாள் வீட்டின் வாசலில் இருந்தது” என பன்சால் தெரிவித்துள்ளார்.
அதை வைத்துதான் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.