பெங்களூரு: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஆதரித்து, பெங்களூருவில் உள்ள கச்சார்கனஹள்ளியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஃபாயஸ் ரஷீத் (21) முகநூலில் கருத்து பதிவிட்டார்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரஷீத் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை விசாரித்த போது, தாக்குதலுக்கு ஆதரவாக யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களிலும் 23 முறை கருத்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.
இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், "ஃபாயஸ் ரஷீத் புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் 23 பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். பொறியியல் கல்லூரி மாணவரான அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருக்காது.
நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து மகிழ்ச்சிஅடைந்து பதிவிட்டுள்ளார். இதுநாட்டுக்கு எதிரான குற்றமாக கருதப்படுகிறது. அவர் மீதானகுற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரசுத் தரப்பு ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. இரு பிரிவினரிடையேபகையை தூண்டுதல், தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார்.
இதனால் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக் கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.