திருச்சி: செல்போனில் ஆபாச படம் பார்ப்பவர்களை குறிவைத்து போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
செல்போனில் ஆபாச படங்களை பார்க்கக்கூடிய நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு 3 புகார்கள் வந்தன.
இதையறிந்த சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சீவ்குமார் உத்தரவின்படி திருச்சி டிஎஸ்பி பால்வண்ணநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், காவலர்கள் லாரன்ஸ், விஜய், ராஜசேகர் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த அசோக் (23) என்பவர் தலைமையிலான கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அசோக்கை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘செல்போன்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் விவரங்களை இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு வழியில் திரட்டி அவர்களை தொடர்பு கொண்டோ அல்லது ஏதாவது ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டோ, தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
பின்னர் அவர்களிடம், ‘‘அண்மையில் நீங்கள் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளீர்கள். இது சட்டப்படி குற்றம். உங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப் போகிறோம்’ எனக்கூறி மிரட்டுகின்றனர். இதனால் பயந்துபோகும் நபர்களிடம், கைது செய்யாமல் இருக்க வேண்டுமெனில் நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறி பலரிடமிருந்து ரூ.5ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மோசடியாக வசூலித்து வந்துள்ளனர்.
இந்த கும்பலில் ஒருவரை கைது செய்துள்ளோம், மேலும் 4 பேரை தேடி வருகிறோம். இதுபோல யாரேனும் தொடர்பு கொண்டு மிரட்டினால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் அதுகுறித்து உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.’’ என்றார்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை ஐ.ஜி சந்தோஷ்குமார், டிஐஜி சரவணசுந்தர், எஸ்.பி.க்கள் சுஜித்குமார் (திருச்சி), தேவராணி (சைபர் கிரைம்) உள்ளிட்டோர் பாராட்டினர்.