க்ரைம்

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி பிரமுகர் மனைவி, தாயார் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ராகேஷ் குப்தா (55). சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இவர், சத்ரா கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராகேஷ் குப்தாவின் வீட்டுக்குள் ஆயுதமேந்திய 4 பேர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் ராகேஷ் குப்தா, அவரது மனைவி (51), தாயார் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஓ.பி. சிங், தடயவியல் நிபுணர்களுடன் அIங்கு விரைந்தார்.

ஓ.பி. சிங் கூறும்போது, “உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் வீட்டின் முக்கிய நுழைவாயில் வழியே உள்ளே சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். கொலையாளிகள் கையில் துப்பாக்கி இருந்ததால் அவர்கள் தப்பிச் செல்லும்போது, அவர்களைப் பிடிக்க யாரும் துணியவில்லை” என்றார்.

சம்பவத்தின்போது, ராகேஷ் குப்தாவின் மகள் சந்தைக்கு சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராகேஷ் குப்தாவின் சகோதரர் ராஜேஷ் குப்தா கூறும்போது, “நீண்டகால அரசியல் போட்டி காரணமாக எங்கள் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்றுவிட்டனர்” என்றார்.

SCROLL FOR NEXT