சென்னை: இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் சாலையோரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அருண் என்ற வாலிபர், அவருடன் சாலையிலேயே தங்கியிருந்தவரின் இரண்டரை வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சென்னை துறைமுகம் அனைத்து மகளிர் போலீஸார் அருணை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட அருணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.