பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் திருவிடைமருதூரைச் சேர்ந்த கார்த்தி(24) காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் நேற்று முன்தினம் தோட்டத்தில் தங்கியிருந்தனர்.
நள்ளிரவில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கார்த்தி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது இடது மார்பில் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த கார்த்தியை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கார்த்தியின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அகற்றினர். பழநி தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.