க்ரைம்

பிரபல நகைக்கடையில் நகைகளை திருடிய ஊழியர் கைது: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக தகவல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில், பணியாளர் ஒருவர் நகைகளைத் திருடி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நகைகளை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் சுவர்ணபுரியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில், சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த தீபக் (29) என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நகைக்கடையில் இருப்பு சரிபார்க்கப்பட்டபோது, நகைகள் குறைந்திருப்பது நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து, கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்திய கடை நிர்வாகிகள், கடையில் இருந்து நகைகளை சிறிது சிறிதாக திருடியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, தீபக் நகைகளை திருடியதாக சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் நகைக்கடை மேலாளர் சதீஷ் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி, தீபக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், ‘நகைக்கடையில் இருந்து, அவ்வப்போது நகைகளை திருடி, அவற்றை விற்பனை செய்தும், அரசுமற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைத்தும் அந்தப் பணத்தைக் கொண்டு, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து விட்டதாக தெரிகிறது. தீபக் 145 பவுன் வரை திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது’ என்றனர்.

SCROLL FOR NEXT