புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் வீதியில் ஆயுர்வேதிக் சென்டர் என்ற பெயரில் அனுமதியின்றி ஸ்பா செயல்படுவதாகவும், பாலியல் தொழில் நடப்பதாகவும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஸ்பாவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த 4 பெண்களை மீட்டு, ஸ்பாவை நடத்திய புதுச்சேரி கொசப்பாளையம் காமராஜ் வீதியைச் சேர்ந்த பாலா (எ) பஞ்சேஸ்வரன், அவரது மனைவி ஆனந்தி ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்து ரூ.20 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அந்த ஸ்பா அனுமதியின்றி செயல்பட்டதும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து தம்பதி மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.