கறம்பக்குடி அருகே மாற்றுத்திறன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெண் உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த அன்புக்கோவில் அருகே இடையன் கொள்ளைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பி.ராஜேந்திரன்(56), எம்.அண்ணாதுரை(41). இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த வீரையா மனைவி அஞ்சலை(60) என்பவரின் வீட்டில் 24 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கடந்த ஆண்டு அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரன், அண்ணாதுரை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அஞ்சலை ஆகிய 3 பேருக்கும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.1.5 லட்சம் அபராதம், பெண்ணை கடத்திய குற்றத்துக்காக தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், வீட்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்துக்காக தலா ஓராண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து, தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், 3 பேரின் மொத்த அபராதத் தொகையான ரூ.6.03 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார். வழக்கை முறையாக விசாரணை செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரை எஸ்.பி வந்திதா பாண்டே பாராட்டினார்.