மும்பை: வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கூறி, வீட்டு உரிமையாளரிடம், போலி ராணுவ அதிகாரி ஒருவர் ரூ.3.65 லட்சம் மோசடி செய்துள்ளார்.
மும்பை அந்தேரி கிழக்கு பகுதியைச் சேர்ந்த ருச்சி(33) என்ற பெண் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக, ஹவுசிங் இணையதளம் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து லட்சுமி நாராயணன், வீர் பிரதாப் யாதவ் மற்றும் மனோஜ் ஆகியோர் இந்த பெண்ணிடம் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் லட்சுமி நாராயணன் என்பவர் ருச்சியை கடந்த 14-ம் தேதி தொடர்பு கொண்டு, தான் ராணுவ அதிகாரி என்றும் மும்பைக்கு மாற்றுதலாகி வருவதால், ஹவுசிங் இணையதளத்தில் வீடு பார்த்து தேர்வு செய்ததாக கூறினார். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீட்டின் போட்டோக்கள் பிடித்து விட்டதால் முன்பணம் கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
ருச்சியிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தனது ஆதார் அட்டை, போலி ராணுவ அடையாள அட்டை, ராணுவ கேன்டீன் அட்டை, ராணுவ சீருடையில் உள்ள போட்டோவையும் அனுப்பியுள்ளார். இவர்கள் உண்மையானவர்களா என்பதை உறுதி செய்வதற்காக, வீடியோ போன் அழைப்பில் வரச் சொல்லியுள்ளார் ருச்சி. வீடியோ அழைப்பிலும் ராணுவ சீருடையில் பேசிய லட்சுமி நாராயணன். நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, மற்றொரு நபரையும் சீனியர் அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார்.
ருச்சிக்கு நம்பிக்கை ஏற்பட்டபின் வீட்டுக்கு முன்பணம் செலுத்துவது தொடர்பாக பேச தொடங்கினர். அதன்பின் ராணுவ விதிமுறைகள்படி, ருச்சியின் வங்கி கணக்குக்கு தன்னால் ஆன்லைன் மூலமாக நேரடியாக பணத்தை அனுப்ப முடியாது எனக்கூறி, முதலில் ருச்சியை ரூ.28,000 பணம் செலுத்தும்படியும், பின்பு அவருக்கு இரண்டு மடங்காக ரூ.56,000 செலுத்துவதாகவும் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார். இப்படியே லட்சுமி நாராயணன் பல பொய்களை கூறி ருச்சியிடம் ரூ.3.65 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் லட்சுமி நாராயணன், வீர் பிரதாப் யாதவ், மனோஜ் ஆகியோர் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு மோசடி
மும்பை ஷகினகா பகுதியைச் சேர்ந்த பகுதி நேர பணியாளர் பங்கஜ் கதாம். இவர் செல்போன் ஸ்பீக்கரில் பழுது ஏற்பட்டதால் அதை பழுதுபார்க்கும் கடையில் கடந்த 7-ம் தேதி கொடுத்தார். சிம் கார்டுடன் போனை கொடுத்துவிட்டு மறுநாள் வரும்படி கடை ஊழியர் கூறியுள்ளார். அடுத்த 3 நாட்களாக கடை திறக்கவில்லை.
கடந்த 11-ம் தேதி அந்த கடையில் வேறு நபர் இருந்துள்ளார். அவரிடமிருந்து தவறான தகவல்கள் கிடைத்ததும், சந்தேகம் அடைந்து தனது வங்கி கணக்கை சரிபார்த்தார் பங்கஜ். அவரது நிரந்தர வைப்பு நிதியில் போடப்பட்டிருந்த ரூ.2.2 லட்சம், வேவொருவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டிருந்தது. பங்கஜ் செல்போனில் இருந்து வங்கி செயலி மூலம், அவரது பணத்தை செல்போன் கடை ஊழியர் மோசடி செய்துள்ளார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.