க்ரைம்

தருமபுரி | இளைஞரை எரித்து கொன்ற தாய், மகள் கைது

செய்திப்பிரிவு

பாப்பாரப்பட்டி அருகே இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற விவகாரத்தில் 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிட்லகாரம்பட்டியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் சிவசங்கர் (32). ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி இயக்கும் தொழிலாளியான இவருக்கு மணமாகி 1 மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

இவரது வீட்டருகே வசிக்கும் மாசிலாமணி மனைவி சஞ்சீவி என்பவரிடம் கடந்த 22-ம் தேதி சிவசங்கர் போதையில் தகராறு செய்துள்ளார். சஞ்சீவி அளித்த புகாரின்பேரில் நேரில் வந்த பாப்பாரப்பட்டி போலீஸார் சிவசங்கரை எச்சரித்து விட்டு சென்றனர்.

இந்நிலையில், அன்று நள்ளிரவில் அப்பகுதியில் உடல் முழுக்க தீக்காயங்களுடன் சிவசங்கர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: வீட்டருகே விறகு அடுக்கி வைப்பதில் சிவசங்கர், சஞ்சீவி தரப்புகளுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், 21-ம் தேதி சிவசங்கர் போதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த சஞ்சீவி (53), அவரது மகள் லட்சுமி பிரியா (32) ஆகியோர் சிவசங்கர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தது தெரிய வந்தது.

இந்த தகவலை சிவசங்கரும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். எனவே, நேற்று சஞ்சீவி, அவர் மகள் லட்சுமி பிரியா ஆகிய இருவரையும் பாப்பாரப்பட்டி போலீஸார் கைது செய்தனர், என்றனர்.

SCROLL FOR NEXT