தீபாவளியன்று இரவு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரகு என்ற ரவுடியை, மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த சிலர், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு அருகே கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
மேட்டூரில், தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (29). பெயின்டிங் வேலை பார்த்து வந்த ரகுநாதனுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சசி (5), கிருத்திகா (2) என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ரகுநாதன், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் பணியைச் செய்யும் வெள்ளையன் (எ)மாரி கவுண்டன் (37) என்பவருடன் சேர்ந்து, அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் உள்ளது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு வெள்ளையனின் எதிர்கோஷ்டியை சேர்ந்த திமுக பிரமுகருடன் ரகுநாதன் சேர்ந்து கொண்டார். இதனால், ரகுநாதன் மீது வெள்ளையன் கோபத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளியன்று (24-ம் தேதி), இரவு, வெள்ளையன் மற்றும் அவரது நண்பர்கள் ரகுநாதன் வீட்டிற்குச் சென்று, அவருடன் தகராறு செய்து, தாக்கியுள்ளனர். கருமலைக்கூடல் போலீஸார் அங்கு சென்று, மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனிடையே, மோதலில் தாக்கப்பட்ட ரகுநாதன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். இந்நிலையில், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் வைத்து, ரகுநாதனை சிலர் கொலை செய்தனர். இதையறிந்த மருத்துவமனை வளாக போலீஸார், கொலையாளிகளை தப்ப விடாமல் கைது செய்தனர்.
கொலை குறித்து போலீஸார் கூறுகையில், ‘அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற ரகுநாதனை, வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் சேர்ந்து, தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். தப்பியோட முயன்ற அவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
இதனிடையே, கொலை குறித்து அறிந்த மேட்டூர் டிஎஸ்பி., விஜயகுமார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். ரகுநாதனின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட எஸ்பி., அபிநவ் தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
ரகுநாதன் கொலை வழக்கில் தொட்டில்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன் (எ) மாரி கவுண்டன் (37), மேட்டூர் ஜீவா நகர் மூர்த்தி (36), மேட்டூர் நாட்டாமங்கலம் பிரகாஷ் (30), தொட்டில்பட்டி நிவேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தினுள் ரவுடி கொலை செய்யப்பட்டது, மேட்டூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.