சென்னை அசோக்நகர் தனியார் மருந்து கிடங்கில் தீ விபத்து 
க்ரைம்

சென்னையில் தனியார் மருந்து கிடங்கில் தீ விபத்து: கார், சரக்கு ஆட்டோக்கள் எரிந்து சேதம் 

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

சென்னை அசோக்நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து கிடங்கு உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த மருந்து கிடங்கில் இருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மருந்து கிடங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் வசிக்கும் பொதுமக்கள் தீ விபத்து குறித்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அசோக்நகர் பகுதியில் உள்ள 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான 2 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில், மருந்து கிடங்கில் இருந்த அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்து உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால், ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் 2 சரக்கு ஆட்டோக்கள் எரிந்து நாசமாகின.

பல மணி நேரம் எரிந்த இந்த தீ விபத்தால் எழுந்த புகை மண்டலத்தின் காரணமாக அருகில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT