செய்யாறில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்ட பொதுமக்கள். 
க்ரைம்

தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் மோசடி? - செய்யாறில் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் ஆரணி கூட்டுச் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலமாக, செய்யாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து ‘தீபாவளி சிறுசேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தங்கம், இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீபாவளி திட்டத்துக்கான பொருட்கள் வழங்கவில்லை. இது குறித்து தனியார் நிதி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியபோது, உரிய பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனியார் நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தீபாவளி பரிசு திட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் பாலு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தீபாவளி பரிசு பொருட்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT