க்ரைம்

திருப்பூர் | இளைஞரிடம் பணம் பறித்த போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் நடராஜ் (34). அவிநாசி போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 12-ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பழங்கரை அருகே இளம் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தது.

அதை பார்த்த நடராஜ், வாகன ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லையெனக் கூறி, அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, புதிய திருப்பூர் பகுதி வரை இளைஞரை வரவழைத்து, நடராஜும், காவல் நண்பர்கள் குழுவில் பணிபுரிந்த மற்றொருவரும் அலைபேசியை பறித்து, ரூ.26 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதன்படி, பணத்தை கொடுத்துவிட்டு அலைபேசியை இளைஞர் பெற்றுள்ளார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸாரிடம் அந்த இளைஞர் புகார் அளித்தார். இதையடுத்து, இளைஞரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட போக்குவரத்து காவலர் நடராஜை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT