பிரதிநிதித்துவப் படம். 
க்ரைம்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டருகே பெட்ரோல் குண்டுவீச்சு: மதுரையில் அக்குபஞ்சர் தெரபிஸ்ட் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது

என்.சன்னாசி

மதுரை: ஆர்எஸ்எஸ் நிர்வாகியின் வாகனம் நிறுத்துமிடத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அக்குபஞ்சர் தெரபிஸ்ட் ஒருவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை கீரைத்துறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு அருகில் அவரது வாகன நிறுத்தமிடத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

சிசிடிவி கேமராக்களின் ஆய்வின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை எஸ்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த அக்கு பஞ்சர் தெரபிஸ்ட் அபுதாகீர் (32) உட்பட 3 பேரை கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் கைது செய்தார். மேலும், ஒருவரை தேடுகின்றனர்.

இந்நிலையில், அவர் மாநில பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும், அவரது அத்தகைய பாதகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், அபுதாகீர், 'தேசியப் பாதுகாப்பு சட்டம் 1980' கீழ் தடுப்புக் காவலில் மதுரை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளார் என மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT