மதுரை: மதுரையில் மேம்பாலம் ஒன்றில் பிறந்தநாள் கேக் வெட்டி 'ஜாலி ரைடு' செய்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாண்டிக்கோயில் சந்திப்பு அருகில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் புதிய மேம்பாலம் உள்ளது. சமீபத்தில் இப்பாலம் பயன்பாட்டு வந்தது. இந்நிலையில், இப்பாலத்தில் ஓரிரு தினத்திற்கு முன்பு சுமார் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர்கள் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். பிறகு அவர்கள் தலைக்கவசம் அணியாமல் தங்களது இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று 'ஜாலி ரைடு' செய்துள்ளனர். இது மேம்பாலத்தில் சென்ற பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சத்தையும், உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவும் வைரலானது.
இது குறித்து மாட்டுத்தாவணி போலீஸார், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் தீனதயாள பாண்டியன் (20), அனுப்பானடி பகலவன் நகர் செந்தில்ராம் மகன் சந்தான ராஜ் (19) ஆகியோர் மீது வழக்கு பதிவு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வீலிங் செய்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் ஜாலி ரைடு செய்யும் நபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என காவல் ஆணையர் செந்தில் குமார் எச்சரித்துள்ளார்.