க்ரைம்

பாலியல் புகாரில் கைதானவர்; தற்கொலை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: பாலியல் புகாரில் கைதானவர் ஜாமீனில் வந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை மதுரை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்தவர் சகுந்தலாதேவி. இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் நாச்சியப்பன் மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரிலிருந்து விடுவிக்க போலீஸார் எனது கணவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கினர். அதன்பிறகும் அவர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கணவர், ஜாமீனில் வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரனூர்போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் வழக்கிலும் தற்கொலை வழக்கிலும் போலீஸாருக்கு தொடர்பு உள்ளது. எனவே, எனது கணவர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரித்து பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் டிஜிபி எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார். அவர் கீரனூர் காவல் நிலையத்தில் உள்ள தற்கொலை வழக்கை மதுரை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். சிபிசிஐடி டிஎஸ்பி மனுதாரர் கணவர் மீதான பாலியல் வழக்கு, தற்கொலை வழக்கு மற்றும் மனுதாரரின் புகார் குறித்து 3 மாதங்களில் விசாரித்து கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT