க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

ஓசூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 வயது சிறுமி, 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி, அந்த சிறுமிக்கு தமிழ் எழுத்து பயிற்சி சொல்லி கொடுப்பதாக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்கு, அப்பள்ளியின் தாளாளரான குருதத் (61) என்பவர் அழைத்துச் சென்று, அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் சசிகலா, வழக்குப்பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தில், குருதத்தை கைது செய்தார்.

இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், சிறுமியை அறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT