க்ரைம்

‘5ஜி மாற்றி தருவதாக கூறுவோரிடம் ஓடிபி எண்ணை தெரிவித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம்’

செய்திப்பிரிவு

செல்போனில் 5ஜி சேவை பெற்றுத்தருவதாக கூறுவோரிடம் பொதுமக்கள் ஓடிபி எண்களை தெரிவித்து ஏமாற வேண்டாம் என தொலை தொடர்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5ஜி தொலை தொடர்பு சேவையை மத்திய அரசு கடந்த அக்.1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. இதேபோல, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் 4ஜி சேவையையும், 2023 ஆகஸ்ட் முதல் 5ஜி சேவையையும் வழங்க உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் சிம்கார்டில் 4ஜி, 5ஜி சேவை களை பெறும் வகையில் அதை தரம் உயர்த்தி தருவதாக கூறி, மோசடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிம்கார்டை மாற்றி தருவதாக கூறும் நபர் கள், செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை பெற்று, அதன் மூலமாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

சிம்கார்டை தரம் உயர்த்து வதற்கு ஓடிபி எண்கள் தேவை இல்லை. எனவே, முறைகேடான வகையில் இதுபோல செல் போனில் தொடர்பு கொள்பவர்கள் உட்பட யாரிடமும் ஓடிபி எண்கள், பின் எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை பொதுமக்கள் தரக் கூடாது.

இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்களை அணுகி விளக்கம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT