மதுரை மத்திய சிறைச் சாலை.கோப்புப்படம் 
க்ரைம்

மதுரை சிறையில் கைதிகள் மோதல் எதிரொலி: போலீஸ் சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மத்திய சிறையில் நேற்று முன்தினம் தண்டனைக் கைதிகள் வெள்ளைக்காளியின் கூட்டாளி ‘டோரி’ மாரி மற்றும் கச்சநத்தம் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி கனீத் ஆகியோரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.

மாரி, கனீத் ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் கைதிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அடைக்கப்பட்டிருந்த அறைகள் மாற்றப்பட்டன.

மேலும் இந்தக் கைதிகள் இருக்கும் வளாகத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் கைதிகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்த சிறையின் 8-வது எண் தளத்தில் சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் தலைமையில் 100 காவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கத்தி, பீங்கான் தட்டுகள், இரும்பு வாளியின் கைப்பிடிகள், கம்பி, கண்ணாடிகள் மற்றும் மரச்சாமான்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த பொருட்கள் சிறை வளாகத்தினுள் எப்படி வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT