க்ரைம்

மும்பையில் ரூ.120 கோடி போதைப் பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மும்பையிலுள்ள கிடங்கில் சோதனை செய்தோம். அந்த கிடங்கில் இருந்து 60 கிலோ எடையுள்ள ரூ.120 கோடி மதிப்பிலான மெபெட்ரான் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் முன்னாள் விமானி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சோஹாலி காஃப்பர் என்பவர் அமெரிக்காவில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்று, கடந்த 2016 - 2018 வரை ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்துள்ளார். இவருடன் முத்து பிச்சைதாஸ், எஸ்எம் சவுத்ரி, எம்.ஐ.அலி, எம்.எஃப்.சிஸ்டி ஆகியோர் மும்பையிலும், பாஸ்கர் என்பவர் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பிச்சைதாஸ் 2001-ம் ஆண்டு வருவாய்த் துறை இயக்குநரகத்தால் மற்றொரு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், 2008-ம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கில் மொத்தம் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையில் நடக்க இருந்த மாபெரும் போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT