தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்த பட்டுராஜா மகன் ரேவந்த் குமார் (26). இவர், சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ம் தேதி தசரா திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் இவர் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளங்கிணறு கிராமத்தை சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரை ஜெகன் என்ற ஜெகன் (36), அவரது தம்பி சுடலை (34), ஆறுமுகம் மகன் முத்துசாமி (40) ஆகியோருக்கு ரேவந்த் குமார் கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புரேவந்த் குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவரை சித்திரை ஜெகன் உட்பட 2 பேர் தசரா திருவிழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் பள்ளங்கிணறு கிராமத்தில் 2 தசரா குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு குழுவில் ரேவந்த் குமார் தீவீரமாக செயல்பட்டதாக தெரிகிறது. தனது சித்தப்பா கொலைக்கு பழிவாங்க ரேவந்த்குமார் தன்னை கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் சித்திரை ஜெகன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்திரை ஜெகன், அவரது சகோதரர் சுடலை, உறவினர் முத்துசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேவந்த் குமாரை நொச்சிக்குளம் விலக்கில் உள்ள கல்லறைதோட்ட பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வரவழைத்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் பார்வையிட்டார். கொலை தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சித்திரை ஜெகன் என்ற ஜெகன் நாங்குநேரி குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நேற்று சரணடைந்தார். முத்துசாமியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுடலையை போலீஸார் தேடி வருகின்றனர்.