க்ரைம்

ரூ.1 கோடி மதிப்பிலான அடகு நகைகள் மாயம்: கோபி அருகே வங்கி மேலாளர் கைது

செய்திப்பிரிவு

கோபி அருகே டிஜி புதூர் வங்கியில், ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளரை, போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டிஜிபுதூரில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அருகாமை கிராமங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர், தங்கள் நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானதாக தகவல் வெளியானது.

தமிழ்நாடு கிராம வங்கியின் டிஜிபுதூர் கிளையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தைத் தணிக்கை செய்தபோது, 2 கிலோ 700 கிராம் எடையுள்ள நகைகள் மாயமாகியுள்ளதாக, ஈரோடு குற்றப்பிரிவு போலீஸில், உயர் அதிகாரிகள் புகாரளித்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் (32)அடகு வைக்கப்பட்ட நகைகளை, வெளியிடங்களில் அதிக தொகைக்கு அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நகைகள் மாயமானதாக கிடைத்த தகவலையடுத்து, கிராமமக்கள் வங்கி முன்பாகத் திரண்டனர்.

அவர்களை பங்களாபுதூர் போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அடகு வைக்கப்பட்ட அனைத்து நகைகளும் பத்திரமாக இருப்பதாகவும், தேவைப்படுவோர், ஒரு வாரத்துக்குப் பிறகு அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை, நான்கு தனியார் நிதி நிறுவனங்களில் வைத்து பணம் பெற்ற மேலாளர் மணிகண்டனை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 பவுன் நகையை மீட்ட போலீஸார், அவர் அடகு வைத்த நிறுவனங்களில் உள்ள நகைகளை முடக்கினர்.

SCROLL FOR NEXT