க்ரைம்

இறைச்சிக் கடையை மூட வலியுறுத்தி தகராறு: இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் கைது

செய்திப்பிரிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(32). இவர், பெரியநாயக்கன்பாளையத்தில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் நேற்று முன்தினம் ஊழியர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கடையை மூடுமாறு அந்த ஊழியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர், ஊழியரை வெளியேற்றி கடையின் ஷட்டரை மூடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஊழியர் கடை உரிமையாளர் சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்தார். அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

விசாரணையில், கடையை மூட வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டவர்கள் இந்து முன்னணியின் ஒன்றிய செயலாளர் சண்முகம் (40), ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத் (22), ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT