சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட ரயில்களில் சட்ட விரோதமாக புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.16 கோடியே 29 லட்சத்து 88ஆயிரத்து 800 மதிப்பிலான போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் உள்ளமுக்கிய நகரங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள் கடத்திவந்து விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படியான நபர்களைக் கைது செய்து, புகையிலை மற்றும் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் வரைபுகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களை ரயில்களில் கடத்தியது தொடர்பாக 127 பேர் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை,ரயில்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடியே 90 லட்சத்து 82ஆயிரத்து 575 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.14 கோடி போதைப் பொருள்: இதுபோல, ரயில்களில் கஞ்சா பொட்டலங்கள், ஹெராயின், அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக 226 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.14 கோடியே39 லட்சத்து 6 ஆயிரத்து 225 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 102 பேர் கைது செய்யப்பட்டனர்.