சின்னசேலம்: கள்ளச் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரை, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்காரபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதும், மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்வதும், அது தொடர்புடையவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமல்லாமல், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கள்ளச் சாராய வியாபாரியிடம் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி உட்கோட்டம் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் என்பவர் சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பிலிருந்து வந்துள்ளார் என்பது விசாரணையில் உறுதியாகியிருக்கிறது. தனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காரணத்தினால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்டக் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் சரக டிஐஜி-க்கு துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு, சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கள்ளச் சாராய வியாபாரிடம் லஞ்சம் வாங்கிய கீழ்குப்பம் காவல் நிலையத்தில் 2-ம் நிலைக் காவலர் ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவனிடம் பேசியபோது, அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து கொண்டு, காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணை போனாலோ அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் தெரிவித்தார்.